காதலர் தினத்தன்று வருமா வர்மா ?

பாலா இயக்கத்தில் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் நடித்துள்ள படமான வர்மா காதலர் தினத்தன்று வெளியாவது சந்தேகம்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியில் விஜய் தேவரகொண்டாவின் கதாப்பத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்க, தமிழ் ரீமேக்கான வர்மா படத்தின் மூலம் விக்ரம்மின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை தமிழ் சினிமாவின் அடையாளமாகக் கருதப்படும் இயக்குனர்களில் ஒருவரான பாலா இயக்குகிறார். தன் நண்பர் விக்ரம்முக்காக முதல் முறையாக ரீமேக் படமொன்றை அவர் இயக்கியுள்ளர்.

இந்த படத்தில் துருவ்வுக்கு மேகா என்றப் புதுமுக நடிகையும் பிக்பாஸ் புகழ் ரைசா முக்கியக் கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார்.படப்பிடிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகள் முடிந்துள்ள இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்னோட்டமாக டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால் இப்போது எதிர்பார்த்தப்படி இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாவதில் சில சிக்கல்கள் உருவாகியுள்ளன. காதலர் தினத்தன்று கார்த்தியின் தேவ் மற்றும் ஜி.வி. பிரகாஷின் 100% காதல் உள்ளிட்ட வேறு சிலப் படங்கள் வெளியாவதால் வர்மாவுக்குப் போதுமான அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இதனால் வர்மாப் படம் தள்ளிப்போகலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.